வித்தியாசம்
September 25, 2012
“ஏங்க..,”
"எனக்கு நம்ம சுபாவை நினைச்சா சந்தோஷமா இருக்குங்க…”
“என்ன திடீர்ன்னு… எப்ப பாரு அவளைத் திட்டிக்கிட்டு தானே இருப்ப நீ.."
“ஆமா… ஒரு வேலை கூட செய்யறது இல்லைன்னு திட்டுறேன் தான். ஆனா… பாருங்க, நேத்து நாம ஊருக்கு போயிட்டோமே, பொண்ணா பொறுப்பா சமைச்சு எடுத்துக்கிட்டு, தம்பிக்கும் போட்டுக் குடுத்திட்டு, பாத்திரமெல்லாம் தேய்ச்சு கழுவி வைச்சிட்டு, வீடு கூட்டி சுத்தம் செஞ்சிட்டு காலேஜ் போயிருக்கா அதான்"
“வருஷம் பூராவுமா வேலை செய்யறா உம் பொண்ணு… என்னமோ தெரியாத்தனமா ஒரு நாள் வேலை செஞ்சிட்டா… அதுக்கு போய் சந்தோஷப்படுறியே…”
“இல்லைங்க… அவளுக்கு ஒண்ணும் செய்யத் தெரியலையோன்னு நினைச்சேன். கல்யாணம், குடும்பம்ன்னு ஆகறப்போ எப்படி சமாளிப்பாளோன்னு கவலைபட்டுக்கிட்டு இருந்தேன்… ஆனா அப்படி இல்ல… செய்யத் தெரியுது, அவளுக்கு… ஆனா செய்யறதில்லை.. அவ்வளவு தான்…
"அவ இங்க வேலை செய்யணுமின்னு இல்ல… தெரிஞ்சுக்கிட்டா போதும். கல்யாணம், குடும்பம்ன்னு ஆனா பொண்ணுங்களுக்கு ஓய்வு ஏது…"
"பரவாயில்லை நம்ம சுபா… அவளை பத்தி எனக்கு தைரியம் வந்திருச்சு..”
“நேத்து அவ வெச்சிருந்த சாம்பார் கூட நல்லாதான் இருந்துச்சு… கொஞ்சம் உப்பு பத்தலை அவ்வளவு தான்…”
----------------------
"என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கா உன்
பொண்டாட்டி..?"
"ஏன்ம்மா?"
“இன்னிக்கு பாத்திரமே தேய்க்காம போயிருக்கா… எல்லாத்தையும் நான் தேய்ச்சேன் இன்னிக்கு…”
"அட…, இன்னிக்கு ஆபீஸ்க்கு கொஞ்சம் சீக்கிரம்
போகணுமின்னு சொல்லிட்டு இருந்தாம்மா சுபத்ரா, அதனால விட்டுட்டு போயிருப்பாளா இருக்கும்."
"அப்படி சீக்கிரம் கிளம்பணுமின்னு நினைக்கறவ
காலையில நேரத்துல எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டு தானேடா போயிருக்கணும்.."
"இன்னிக்கு ஒரு நாள் வந்துதான் தேய்ச்சிக்கட்டுமே ம்மா!!!"
"அது எப்படிடா, ஒரு நாள்ன்னாலும் செய்யாம போகலாம்… தினமும் சாப்பிடல, குளிக்கல…”
“வீட்டுல வேலை ஜாஸ்த்தின்னு ஆபீஸீக்கு லேட்டா போவாளா… வெறுமனே குவிச்சு வெச்சிட்டு போயிட்டா எந்த வேலைக்காரி வந்து செய்வான்னு நினைச்சுக்கிட்டு போயிருக்கா அவ…”
"அப்படியாவது நல்லா சமைக்கவாவது செய்யறாளா, ஏதோ ஒண்ணாவது உருப்படியா
செய்யறாளேன்னு சொல்றதுக்கு. அதுவும் இல்லை, நேத்து சாம்பார் ன்னு ஒண்ணு வைச்சிருந்தாளே
உப்பே போடாம… இந்த அழகுக்கு பாத்திரம் தேய்க்க கூட நேரமில்லையாம்மா அவளுக்கு.."