காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சொன்னதும் சொல்லாததும்

February 3, 2011

சொன்னது
வெள்ளநிவாரணத்துக்கு அதிக நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை



சொல்லாதது 
தேர்தல் வருது சாமி. பாத்து பண்ணுங்க. நீங்க ஒதுக்கற நிதிய பொறுத்து தான் ஓட்டுக்கு 1000மா இல்ல 5000ன்னு முடிவு பண்ணனும்.
-----------------------------------------------------------------------------------------------
சொன்னது 
எகிப்தில் நடந்து வரும் போரட்டங்கள் அவர்கள் உள்நாட்டு பிரச்சனை - இந்தியா கருத்து

சொல்லாதது
நக்சல் பிரச்சனை ஜார்க்கண்டு, ச‌ட்டீஸ்கர், பீகார் மாநிலங்களின் பிரச்சனை.
தமிழக மீனவர் கொலை அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை. இதிலெல்லாம் மத்திய அரசு தலையிடாது..

-----------------------------------------------------------------------------------------------
சொன்னது
உளவுத்துறையின் எச்சரிக்கையை மாநில அரசுகள் அலட்சியப்படுத்துகின்றன - ப.சிதம்பரம்.

சொல்லாதது
அப்பாடா.. பிரச்சனையை தள்ளிவிட்டாச்சு. இத வெச்சு தேர்தல்ல நமக்கு வேண்டியதை தலைகிட்ட கேட்டு வாங்கிக்கலாம்
----------------------------------------------------------------------------------------------
சொன்னது
சபரிமலையின் 18 படிகளை அகலமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. படிகள் வெறும் கட்டுமானம் அல்ல. அதில் பக்தர்களின் நம்பிக்கையும் சேர்ந்திருக்கின்றது - திருவாங்கூர் தேவஸ்தானம் 

சொல்லாதது
அதில் பக்தர்களின் உயிரும் கலந்திருக்கின்றது.  வேறேந்த செலவும் செய்யமுடியாது. வரவு மட்டுமே எங்கள் குறிக்கோள்
---------------------------------------------------------------------------------------------
சொன்னது
மத்திய அரசு தனது தரப்பு விளக்கங்களை தெரிவிக்க வேண்டியது உள்ளது. மத்திய பொது தணிக்கை குழு அறிக்கையை மட்டும் வைத்து 2ஜி லைசென்சை ரத்து செய்ய முடியாது - சுப்ரீம் கோர்ட்



சொல்லாதது
ஊழலை நிரூபித்தால் கூட லைசென்ஸ் ரத்து கிடையாது.  இதுல தணிக்கை குழு அறிக்கைக்கே லைசென்ஸ் ரத்தா. என்ன சின்னபுள்ளதனமா இருக்கு

Read more...

ஆத்திகமும், நாத்திகமும்

January 31, 2011



பதிவர் ஆதியின் ‘நாத்திகம் காத்தல்’ பதிவை படித்தபின் என்னுள் எழுந்த எண்ணங்களின் தொகுப்பே இப்பதிவு....

ஆத்திகம்..

கடவுள் நம்பிக்கை என்பது என்ன..?

ஒரு வரியில் சொல்வதானால்... நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு என்று நம்புவதே அது.

ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருப்பதோடு நில்லாமல் அந்த கடவுள் நம்பிக்கையை கொண்ட ஒரு கூட்டம் (மதம்) அந்த சக்திக்கு ஒரு வடிவம் தந்தது.. (ஒரு வடிவம் அல்ல.. பல வடிவங்கள்.) ஆணாகவோ, பெண்ணாகவோ சித்தரித்தது, அதற்கு ஆடைகளையும், ஆபரணங்களையும் (அதுவும் அவரவர் வழக்கப்படி, இஷ்ட்டப்படி...) தந்து மகிழ்ந்தது..

அந்த காலத்தில் ஏற்பட்ட வடிவங்களில் அந்த காலத்திய உடைகளான வேட்டி, சட்டை, புடவைகளை பார்க்கலாம்.. ஒரு வேளை இந்த காலத்தில் ஒரு புதிய கூட்டம் (மதம்) உருவானால், அந்த கூட்டம் புதியதோர் வடிவத்தை தந்தால் அதில் ஜின்ஸ் பேண்ட், பாப் கட் கொண்ட உருவங்கள் ஏற்படலாம். அந்த உருவங்களை நம்பிக்கைகளின் பேரில் நாம் வழிபடவும் செய்யலாம். தவறில்லையே!!!

ஆடைகள், ஆபரணங்களோடு நில்லாமல் நியம நிஷ்ட்டைகளும் ஏற்படுத்தப்பட்டன… அதாவது do’s and don’t’s. அதோடு  நிற்கவில்லை.. அந்த உருவங்கள் குடியிருக்க இடங்கள் (கோவில்கள், சர்ச்சுகள், பிற வழிபாட்டுத் தலங்கள்) கட்டப்பட்டன.. அதை பாதுகாக்க அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்… அந்த இடங்களுக்கென சொத்துக்கள் உருவாக்கப்பட்டன… அந்த சொத்துக்களின் வருமானத்தில் அந்த வடிவங்களுக்கான பண்டிகைகள் முதலான காரியங்கள் நடந்தேறின..

எல்லாமே சரியாக நடக்குமா என்ன?  சில அறங்காவலர்கள் அந்த சொத்துக்களை அபகரிக்கவும் செய்தார்கள்… இப்படிப்பட்ட சூழலில் நாம் அந்த அறங்காவலர்களை தான் தண்டிக்கவும், பழிக்கவும் செய்யவேண்டுமே தவிர, தெய்வ நம்பிக்கையின் காரணமாகத்தானே இப்படி நடந்தது, எனவே கடவுள் நம்பிக்கையே தவறு என்று சொல்லலாகுமா…!!!!

சபரிமலை புலிமேடு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். பக்தி என்று சொல்லிக்கொண்டு எதற்காக இத்தனை மக்கள் அங்கே வருகிறார்கள். எல்லோரும் டிவியில் மகரவிளக்கை காணவேண்டியது தானே என்று சிலர் “The Hindu” எடிட்டர் பகுதியில் எழுதியிருந்தார்கள். நாத்திகர்களும் இந்த சம்பவத்தை வைத்து கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்கிறார்கள். இதே கோவிலாக இல்லாமல் ஒரு தொழிற்சாலையாக, பாலமாக, இருந்தால்…

கூட்டம் கூடுவது மக்கள் தவறல்ல, அதற்கான சரியான வசதிகளை செய்து தராதது நிர்வாகத்தின் தவறேயாகும்.

மதமோ, கடவுள் நம்பிக்கையோ, அறமோ... ஏதோ ஒரு பெயரில் அக்காலத்தில் மக்களுக்கு தொண்டு செய்யவே நினைத்தார்கள்… காலப்போக்கில் அவை மாறிப்போய்விட்டது.. அவ்வளவே..!!!

என்னைப் பொருத்தவரையில் நீ இந்த காரியத்தை முடிந்துக்கொடு, நான் இதை செய்கிறேன் என்று சாமியிடம் பேரம் பேசுவது தவறு மாறாக தெய்வமே.. எனக்கு இப்படிப்பட்ட கஷ்ட்டம் வந்திருக்கின்றது அதை தாங்கும் சக்தியை தா.. அல்லது அதை தீர்க்கும் வழியை காட்டு என்று வேண்டிக்கொள்ளலாம்.. ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் நம்மால், ஒரு சராசரி மனிதனால் அப்படிப்பட்ட தெளிந்த நிலையில் இருக்கமுடிவதில்லையே… எனவே தான் கைக்கு கிடைத்த ஆதாரமாக மூடநம்பிக்கைளை பற்றிக்கொள்கிறோம் சில சமயங்களில்.

உண்மையில்  மூடநம்பிக்கைகள் என்று கிடையாது மாறாக அவையனைத்துமே திரிக்கப்பட்ட நம்பிக்கைகள் தான். உதாரணத்திற்கு மொட்டையடிப்பதை எடுத்துக்கொள்ளலாம்.
நான் இப்படி தப்பு செய்துவிட்டேன். அதன் காரணமான என் அகங்காரத்தை நானே ஒழித்துக்கொள்ளும் விதமாக மொட்டையடித்துக்கொள்கிறேன் என்று வேண்டிக்கொண்டார்கள் அன்று.

ஆனால் இன்றா, நான் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன், அந்த தெய்வம் கண்டிப்பாக எனக்கு அதை செய்துதரும் என்று சொல்கிறார்கள். இந்த திரிக்கப்பட்ட நம்பிக்கை தான் தவறே, தவிர கடவுள் நம்பிக்கை தவறல்லவே.. 

ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு செல்கிறீர்கள். அதில் பேசப்போகும் பாயிண்டுகளை நன்கு குறிப்பெடுத்துள்ளீர்கள்.. Projector போன்ற உபகரணங்களையும் test செய்து வைத்துக்கொள்கிறீர்கள், உங்கள் மீது உங்களுக்கு அசாத்திய நம்பிக்கையும் உள்ளது.  ஆனாலும் புறப்படும் சமயம் கடவுளை வணங்கிவிட்டு செல்கிறீர்கள். இது மூடநம்பிக்கையா? புறப்படும் இடத்திலிருந்து நாம் சென்று சேரும் இடம் வரும்வரை நம் கண்ணுக்குதெரியாத எத்தனையோ இதர்பாடுகளை களைந்து நம்மை காக்குமாறு நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியிடம், கேட்டுக்கொள்கிறோம். அவ்வளவே..!!!

ஆனால் கடவுளே இல்லை என்று சொல்வதை கேட்டால் சிரிப்புத்தான் வருகின்றது.. ஒரு அலுவலத்திற்கு நீங்கள் ஒரு கடைநிலை ஊழியராக சேரப்போகின்றீர்கள்.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தின் உரிமையாளரை நீங்கள் பார்க்கவில்லை.. உடனே அந்த அலுவலத்திற்கு உரிமையாளரே கிடையாது என்று சொல்லிவிடமுடியுமா…

தக்கிளியூண்டு அலுவலத்திற்கே உரிமையாளர் இருப்பாரென்றால், இவ்வளவு பெரிய அண்ட சராசரத்திற்கு உரிமையாளர் / பாதுகாவலர் இருக்காமல் இருப்பாரா..? அப்படிப்பட்ட அவர் நம்மைப்போன்ற கடைநிலை ஊழியருக்கு காட்சி தான் தருவாரா..?
 
ஆனால் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகளே நாத்திகர்களை உருவாக்குகின்றது என்று எண்ணுகிறேன். எனவை நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையை எதிர்க்கவேண்டாமென்றும் அதன் பெயரைச் சொல்லிக்கொண்டு நடத்தப்படும் மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் எதிர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்திகர்கள் கடவுள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் பிரித்தரிய கற்றுக்கொண்டு மேன்மேலும்  கடவுள் நம்பிக்கையில் மூழ்கித் திளைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.



Read more...

வந்தார்கள்... சுரண்டினார்கள்

January 6, 2011

சமீபத்தில் தான் மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படிக்க முடிந்தது. ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னா அது ‘சூரியனுக்கே டார்ச்’ அடிக்கற மாதிரி…

குட்டி குட்டிப் பெட்டி செய்திகளுடனும், சுவையான எழுத்து நடையுடனும் இருக்கும் அந்த புத்தகத்தை விமர்சனம் பண்ணப்போறதில்லை நான்.

அந்த காலத்துல நடந்த சம்பவங்களையே இப்படி சுவையா எழுதமுடியும்ன்னா இந்த காலத்துல நடக்கறத எழுதினா!!! அதாவது கி.பி 2100ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்ததை கி.பி.3500 ல் எழுதினால் எப்படியிருக்கும்ங்கற ஒரு கற்பனை தான் இந்த பதிவு

வந்தார்கள்.. வென்றார்கள்’ – அதாவது படையெடுத்து வந்தார்கள், போரில் வென்றார்கள். இங்கே நான் எழுதப்போவது ‘வந்தார்கள்.. சுரண்டினார்கள்’, அதாவது, ஆட்சிக்கு வந்தார்கள், பணத்தை சுரண்டினார்கள்.

ரெடி ஸ்டார்ட் மியூசிக்… !!!! (imagine கவுண்டமணி வாய்ஸ்)
-------------------------------------------------------------------------------------------
மன்னராட்சி மக்களை கஷ்ட்ப்படுத்துகிறது என்று சொல்லி, கி.பி. 2000மாம் ஆண்டுகளில் இந்தியாவில் மக்களாட்சி என்ற ஒன்றை கொண்டுவந்தார்கள். அதாவது மன்னருக்கு பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே மக்களை ஆள்வது என்பது தான் அது.. 

ஆனால் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது மாறி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் பரம்பரையில் வந்தவர்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தது தான் நடந்ததே தவிர வேறோன்றும் வித்தியாசமில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியே ஆனாலும் அவர்கள் செய்த அட்டூழியங்களை மக்களால் தட்டிக்கேட்க முடியாமல் இருந்தது தான் மக்களாட்சியின் துரதிருஷ்ட்டமாக இருந்தது..
-------------------------------------------------------------------------------------------
இதில் 10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தனது உழைப்பு அனைத்தையும் தனது குடும்பத்திற்காகவே செலவிட்டார். குடும்பம் என்றால் மகள், மகன் மட்டுமல்ல, மகள் வயிற்று கொள்ளு பேத்தி, மாமன் மகள் பெற்ற எள்ளு குழந்தைகள், அவர்தம் செல்ல வளர்ப்பு பிராணிகள் எல்லாம் அடங்கும்…

அவரை பற்றி சில தமாஷ் செய்திகள்…
10 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பாராட்டுக்கு என்றுமே மயங்குபவராக இருந்துள்ளார்… அவர் எந்தவொரு செயல் செய்தாலும், பாராட்டி விழா எடுத்து, விருது வழங்குவதை, அவரிடம் காரியம் சாதித்து கொள்பவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இப்படி எதற்கெடுத்தாலும் விழா எடுத்து எடுத்து கடைசியில் அவர் தினமும் காலையில் இட்லியும், தாளிக்காத சட்னியும் சாப்பிடுவதை கொண்டாடி பிரம்மாண்ட விழா எடுத்து, அவருக்கு
‘இட்லி சாப்பிடும் இளந்தலைவர்!!!’ (அப்போது அவருக்கு வயது 120)
என்றும்
‘தாளிக்காத சட்னி சாப்பிடும் தன்மான சிங்கம்’ 
என்றும் விருதுகள் வழங்கப்பட்டன என்று குறிப்புகள் சொல்கின்றன…

மக்களை உழைக்கும் வர்க்கமாக்காமல், அடிப்படை வசதிகள் செய்து தராமல், இலவசங்கள் அள்ளித் தந்து, மண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பெருமையும் அவரையே சாரும் என்று வரலாற்று ஆசிரியர் சோ என்பவர் தெரிவிக்கிறார்.

ஆம் அவரது ஆட்சியில் மக்களுக்கு டிவி என்கிற சாதனத்தில் ஆரம்பித்து, அன்றாட சமையலுக்கு தேவையான கருவேப்பிள்ளை, கொத்துமல்லி வரை இலவசமாக தரப்பட்டது…

யாரையும் (எந்த கட்சியையும்) எளிதில் பகைத்து கொள்ளாததும், சலுகைகளை வாரி இறைத்ததும், அதை அடிக்கடி விளம்பரப்படுத்திக் கொள்வதும், ஜெயலலிதா கட்சியைக் காட்டிலும், நல்ல கட்டுக்கோப்பான கட்சியை நடத்தியதும், அவரது ப்ளஸ்கள்..

ஆனால் அவர் பார்த்து பார்த்து வளர்த்த குடும்பத்தாலேயே அவரது ஆட்சி சரிந்தது என்பது தான் வேதனையான தமாஷ்..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விருது வாங்கி கருணாநிதி தான் அப்படி என்றால், அவருக்கு சக்கிவாய்ந்த எதிரியாளியாக கருணாநிதியாலேயே கருதப்பட்ட ஜெயலலிதா என்பவர் தான் இமாலய ஊழல்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட அம்மையார்.

மேலும் அவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, அறிக்கை என்று தனது இருப்பைக் காட்டிக்கொண்டவர். அதன் பயன் என்னவெனில் குழந்தைகள் வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் கூட பெற்றவர்கள் அந்த குழந்தையை பார்த்து

‘ஏன்டா இப்படி அழுது போராட்டம் செய்யற’ என்று சொல்லும் அளவுக்கு போய்விட்டது…

7, 8 மொழிகள் அறிந்திருந்தும், நல்ல ஆளுமைத் திறன் இருந்தும், கட்சியில் யாரையும் வளரவிடாமல் இருந்ததும், தான் செய்த ஊழலை மறைக்க தெரியாததும், மக்களிடமும், மீடியாக்களிடமும், தன்னை சுற்றியிருப்போரிடமும் நீக்குபோக்கு காட்டத்தெரியாமல் இருந்ததும் அவரது சரிவிற்கு முக்கிய காரணம்… என்று 2025ல் தான் எழுதிய நூலில், வரலாற்று ஆசிரியர் மதன் கூறுகிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜா காலத்தில் ஆட்சிகள் மாறியதும், பழுக்க காய்ச்சிய வாளை அரசியல் எதிரிகளின் கண்களில் பாய்ச்சி, அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள். அது கி.பி.1600களில். 

ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட கி.பி. 2100களில் அரசியல் எதிரிகளை வழக்கு போட்டு அவர்கள் மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்வார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.. 


Read more...

உதிரிப்பூக்கள் – டிசம்பர் 21, 2010

December 21, 2010

யானைக்குட்டி


கோவை வனச்சரகத்தில் பிறந்த சில மணிநேரங்களிலேயே யானைக்குட்டி ஒன்று கைவிடப் பட்டுள்ளதாம்..  அதை அதன் தாயுடன் சேர்க்க நடந்த முயற்சிகள் (மனித வாசனை பட்டால், யானைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், யானையின் சாணத்தை பூசிக்கொண்டு, அந்த குட்டியை பராமரித்துள்ளார்கள்) தோல்வியடைந்து, அந்த குட்டி வண்டலூரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

இது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதான்… ஆனால் எனக்கு எரிச்சல் வந்தது தினமலர் பாத்து தான். அந்த யானை குட்டி ‘சொகுசாக’ காரில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டதாம். என்ன ‘சொகுசு’!!! தாயை பிரிந்து, வாழ போராடும் ஒரு குட்டி, வண்டியில் ஏற்றி அனுப்பபட்டால், அதுக்கு பேரு சொகுசா???

விஜயகுமார், வனிதா நியூஸ் கவர் பண்றதைக் காட்டிலும், இந்த மாதிரி செய்திகளையாவது இந்த பத்திரிக்கைகள் அதிகம் போடலாம்… அந்த வகையில ஹிந்து பத்திரிக்கை பரவாயில்லை…
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வந்தார்கள் வென்றார்கள்


மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ படித்தேன். நல்லாயிருந்தது. (1995ல வந்த புத்தகம். இப்பத்தான் படிக்கமுடிஞ்சது… இவ்வளவு நாளா எப்படித்தான் மிஸ் செய்தேனோ!!!)

பெட்டி செய்திகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது…
அரச பதவிக்கு போட்டியாக இருப்பவர்களின் கண்களை நோண்டியெடுப்பார்களாம்… இல்லைன்னா பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிய கண்ல விட்டு கண்ணைக் குருடாக்குவார்களாம் என்ன கொடுமை சார் அது?

அதில் போரில் வென்ற பின், பிடிபட்ட ஆயிரக்கணக்கான கைதிகளை பார்த்து தைமூர் சொல்லும் ஒரு டயலாக்…
‘இதில் கட்டடக் கலைஞர்களையும், ஓவியர்களையும், சிற்பிகளையும் நம்முடன் கொண்டு செல்வோம். எதற்கும் உபயோகமில்லாத 
க(ம)ற்றவர்கள் தலைகள் வழக்கம்போல் சீவப்படலாம்’

அந்த காலத்தில் அவர்களுக்கு தான் மவுஸ்… இந்த காலத்தில் ஓவியர்களையும், சிற்பிகளையும் நாம் மதிப்பதேயில்லை…

-------------------------------------------------------------------------------------------------------------------------------

தெளிவு, திறமை, நேர்மை ஆகியவற்றின் மொத்த உருவமாக பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார்
 --- இப்படி இந்த வார காமெடியை சிரிக்காமல் சீரியசாக சொல்லியிருப்பவர் வேறு யாருமில்லை… சோனியா காந்தி தான்..

-------------------------------------------------------------------------------------------------------------------------------


மன்னன் படத்தின் இந்தி பதிப்பு பார்த்தேன். தனுஷ், ஜெயம் ரவி மட்டும் இல்லை, ரஜினி, கமல், MGR, சிவாஜி ஆகியோரின் படங்களும் பெரும்பாலும் காப்பி தான். என்ன ஹிந்தியில இருந்து இருக்கும். 
கொஞ்சம் ZEE cinema, Star Gold சேனல்கள் பார்த்தால் தெரிந்துபோய்விடும்.

என்னதான் ஸீன் பை ஸீன் எடுத்திருந்தாலும் ஒருவர் செய்ததை இன்னோருவரால் செய்யவே முடிவதில்லை…

எங்க வீட்டுபிள்ளை படம் கன்னடத்தில் விஷ்ணு வர்த்தன் செய்திருப்பார். அவர் நல்ல நடிகர் தான். சந்தேகமில்லை. ஆனால் அந்த சாட்டையை சுழற்றிக்கொண்டு MGR பாடும் ‘நான் ஆணையிட்டால்’ பாட்டை நின்ற இடத்திலேயே நின்று கொண்டு விஷ்ணு வர்த்தன் செய்யும் போது, கை தன்னியல்பாக சேனலை மாற்றவே செய்யும்.

Back to மன்னன் ஹிந்தி பதிப்பு.. ஸ்ரீதேவி தான் விஜயசாந்தி கேரக்டரில். அந்த மிடுக்கும், அகங்காரமும் ஸ்ரீதேவிக்கு வரவில்லை… கண்ணில் கோபம் வந்தாலும், body language சரியாக வரவில்லை அவருக்கு…

ரஜினியை அப்பாயிண்ட் செய்யும் சீனில்
‘நீங்க ஜிஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ, இல்லை பாஜிபாய் கம்பெனில வேலை பாத்தீங்களோ எனக்கு கவலையில்லை என்று ஆரம்பித்து நெத்தியில பட்டை, உத்திராட்ச கொட்டை’ என்று instruction கொடுப்பதாகட்டும், செக்ரட்டரி எங்கே என்று கேட்கும் ரஜினியிடம் கை சொடுக்குவதாகட்டும், இல்லை தியேட்டரில் ரஜினிக்கும் கவுண்டமணிக்கும் மோதிரத்தையும், செயினையும் அப்படி அலட்சியமாக கொடுக்கும் (போடும்) ஸீனாகட்டும் விஜயசாந்தி தான் டாப்பு.. சான்சேயில்லை அவ்வளவு நல்லா செய்திருக்கிறார்..





Read more...

திருக்கடையூர் – திருக்கோவில் பயணம்

December 16, 2010

 திருக்கடையூர். பெயர் கேட்டதும், திருக்கடையூர் அபிராமி என்று பெரும்பாலும் சொல்லிவிடுவோம். முன்ன பின்ன நாம அந்த கோவிலுக்கு போகலின்னாலும், மார்கழி மாத பஜனை பாடல்களில் நமக்கு நல்ல பரிச்சயமான கோவில் தான்.

கோவிலின் அம்மை - திருக்கடையூர் அபிராமி
கோவிலின் ஈசன் – அமிர்த்தகடேஸ்வரர்

மயிலாடுதுறையில் இருந்து டவுன் பஸ் போகிறது. ஆனால் 1 மணி நேரம் ஆகின்றது… (டவுன் பஸ்.. அதுவும் அரசு பஸ்.. வேகத்துக்கு கேக்கவா வேணும்!!!!) கும்பகோணம் தான் போக்குவரத்து கழகத்தின்  zonal ஆஃபிஸ். அதனால் தானோ என்னவோ, கும்பகோணம், மயிலாடுதுறையில் பஸ்கள் அனைத்தும் பரிதாபகரமான நிலையில் இருக்கின்றன… காயலான் கடைக்கு எடுத்து போனால் உடைத்துப்போட நம்மிடமே காசு கேட்பார்கள் என்ற சொற்றொடர் இந்த பஸ்களை பார்த்து தான் வந்திருக்கும் போல!!!!

கோவிலின் முகப்பு

இந்த கோவிலில் 60ம் திருமணங்கள் தான் மிகவும் விசேஷம்… கல்யாணங்களை போன்றே அவைகளும் மிக விசேஷமாய், ஆடம்பரமாய் நடத்தப்படுகின்றன… கோவிலெங்கும் , திருமண கோலமாய் இருக்கின்றது. சொந்தபந்தம் அனைத்தையும் அழைத்து, எல்லா சம்பிரதாயங்களை (ரூ4000, ரூ 8000) செய்பவர்களும் இருக்கின்றார்கள், அர்ச்சனை மட்டும் (ரூ 96, அர்ச்சகருக்கு 200) செய்து கொண்டு தாலி கட்டிக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.

வாக்கிங் போகும் யானை
நாமெல்லாம் வாக்கிங் போனால் காலையில் இல்லேன்னா மாலையில் போவோம், ஆனால் இந்த கோவில் யானை நாள் முழுவதும் வாக்கிங் போகின்றது…  அதாவது கல்யாணத்துக்கு சீர் வரிசை எடுத்து வருபவர்களை கோவிலின் நுழைவாயிலில் இருந்து கொடிமரம் வரை அழைத்து வருகின்றது… (ஆசை தோசை… அப்பள வடை…  சும்மா வருமா… அதுக்கு தனியா டப்பு தரணும்…).  ஒரு  செட்டு வந்ததும் இன்னோரு செட்டு ரெடியா இருக்கு… பாவம் யானைக்கு தான் அந்த கோவில்ல ஓய்வேயில்ல…

யானையுடன் சீர் வரிசை கொண்டுவருவோர்


அங்க அர்ச்சகர்கள் எல்லாம் பயங்கர பிசி (கவுண்டமணி மாதிரி இல்ல.. நிஜமாவே பிசி தான்…) ஆளாளுக்கு கையில செல்போஃன் வெச்சு நல்லா கல்லா கட்டறாங்க… ஒரே சன்னிதியில் அத்தனை அர்ச்சகர்களும் எப்படித்தான் அர்ச்சனை செய்யறாங்களோ!!!! (அடடே ஆச்சர்யக்குறி!!!)… ஒரே ஆச்சர்யம் தான்…


அம்மன் சன்னிதியில் வாயில் காக்கும் மகளிரணி

கோவில் நல்லா பெரிசாவே இருக்கு… கோவில்ல என்னைக் கவர்ந்த இன்னோரு விஷயம், அங்கயிருந்த ரெண்டு பெரிய குத்துவிளக்குகள்… ஆளுயரத்துக்கு இல்லை இல்லை…. ஓர் ஆளை விடவும் உயரமாக இருந்தன அவை… (பக்கத்தில் இருக்கும் சின்ன அகல்விளக்கை பார்த்தால், அந்த விளக்குகளின் பிரம்மாண்டம் புரியும்… )
பிரம்மாண்டமான குத்துவிளக்குகள்

 ஆக மொத்தத்தில் இந்த முறை  terror விசிட்டாக இல்லாமல், நல்லதொரு பயணமாகவே அமைந்தது… 

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP