எம தர்பார்
March 14, 2011
‘அரசே..’
‘மன்னா…’
‘வேந்தே…’
‘ஐயா…’
(நாம் கூப்பிட்டது இவர் காதிலேயே விழவில்லை போலிருக்கின்றது.. எதற்கும் பூலோகமுறைப்படி அழைப்போம்…)
‘சார்…’
யமதர்மர்: "சாராம்… சார்.. ஏன்.. மோர், பால், தயிர், என்றேல்லாம் கூப்பிடுவது தானே,சித்ரகுப்தா… "
"பூலோகம் சென்றுவந்தது முதல் உமக்கும் அந்த பித்து பிடித்துவிட்டதா..? என்னை அழைக்க உனக்கு நம் தமிழில் வார்த்தைகள் கிடைக்கவில்லையா..? "
சித்ரகுப்தர்: "இல்லை வேந்தே… அப்படித்தான் உங்களை அழைத்தேன்.. தாங்கள் மிகுந்த யோசனையில் இருந்ததால், பூலோகமுறைப்படி அழைத்தேன்… மன்னியுங்கள் பிரபு.." (நீங்களும் அதற்குதானே திரும்பினீர்கள்.. ஆனால் குற்றம் சொல்வதென்னவோ என்னை… ம்.. இந்த யஜமானர்களே இப்படித்தான்… )
யமதர்மர்: "பரவாயில்லை குப்தா…. எனக்கிருந்த கோபத்தில் உன்னை சற்று வேகமாக பேசிவிட்டேன்.."
சித்ரகுப்தர்: (பேசினதெல்லாம் பேசிவிட்டு இந்த வார்த்தை ஜாலம் வேறா..) "அப்படியென்ன யோசனை அரசே? "
யமதர்மர்: "சொல்கிறேன்.. .. .. சொல்கிறேன்.. உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லபோகிறேன்.. "
சித்ரகுப்தர்: (ம்க்கும்… இப்படி சொல்லி சொல்லியே இவர் நம்மிடம் வேலை வாங்கிவிடுவார்… அந்த கார்பரேட் முதலாளிகளுக்குக்கெல்லாம் இவர் தான் குரு போலிருக்கின்றது…. )
யமதர்மர்: "ஆமாம், குப்தா.. கொலைகளை நாம் எப்படி தரம் பிரித்திருக்கின்றோம்..? "
சித்ரகுப்தர்: "மன்னா.. கொலைகளில் ஒரு 6 வகை உள்ளது.."
- தெரியாமல், அறியாமல் செய்துவிடுவது..
- தெரிந்தே, திட்டமிட்டே செய்வது..
- தெரிந்தே, திட்டமிட்டே, கொடூரமாக செய்வது
- தனக்கு நேரடி விரோதம் இல்லாவிட்டாலும் பணத்துக்காக கொலை செய்வது..
- விபத்தில் செய்துவிடுவது..
- சின்ன குழந்தைகளை கொலை செய்வது…
"இதில் 2-6 வகைக்கு நாம் கடுமையான தண்டனைகளை தருகிறோம்.. மன்னா.."
யமதர்மர்: "சரி.. இனிமேல் இதில் தமிழ்க்கொலை என்ற பிரிவையும் சேர்த்துவிடு.."
சித்ரகுப்தர்: "ஓ…தமிழில் பெயர் வைத்தாலே வரி விலக்கு என்பது போலவா மன்னா.. தமிழ் என்ற பெயருடையவர்களை கொலை செய்வதா மன்னா..?" (தப்பா சொல்லிட்டோமோ!!! நம்மையே கொலை செய்துவிடுவது போல் பார்க்கிறாரே!!!)
யமதர்மர்: "மூடனே!!! சங்கம் வைத்து வளர்த்த நம் தமிழை சிதைப்பவர்களை சொன்னேன்..நம் பூலோக உலாவில் இந்த மானிட பதர்கள் நம் தமிழை சின்னாபின்னமாக சிதைப்பதை பார்க்கவில்லையா நீ..???? "
சித்ரகுப்தர்: "ஆமாம் ஆமாம்.. பார்த்தேன்.. இல்லையில்லை கேட்டேன்.. "
யமதர்மர்: "ம்.. நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது முழுவதுமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறார்களா.. அதுவும் இல்லை.. தமிழில் பேசிக்கொண்டிருக்கையில் நடுநடுவே ஆங்கில வார்தைகளை தூவிக்கொள்கிறார்கள்.. "
சித்ரகுப்தர்: "சமையலில் கொத்துமல்லி தூவுவது போல்.. என்ன மன்னா…?? "
யமதர்மர்: "சமையல் என்று சொன்னதும் தான் நினைவு வருகிறது.. இந்த தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை தருகிறார்களே… அவர்களை மட்டும் தனியே கவனிக்க வேண்டும்.."
சித்ரகுப்தர்: ஆமாம்.. ஆமாம்.. அப்பொழுது தான் புதுசு புதுசா அவங்க செய்யறதெல்லாம் நாம சாப்பிட்டு பாக்கலாம்…
யமதர்மர்: "நீர் மங்குனி அமைச்சரே தான்.. சந்தேகமேயில்லை.."
சித்ரகுப்தர்: (பின்ன உங்களுக்கில்ல அமைச்சராயிருக்கேன்..) "சமையல் கலைஞர்கள் மேல் அப்படியென்ன கோபம் அரசே? "
யமதர்மர்: "பின் என்ன குப்தா.. பதார்த்தம், சுவை, மணம், அருமை போன்ற வார்த்தைகளை எல்லாம் தொலைத்து தலைமுழுகிவிடுவார்கள் போல.."
"இந்த டிஷ் பாத்தீங்கன்னா… ரொம்ப tasteஆ இருக்கு.. பாக்கவே mouth wateringஆ இருக்கு.. "
"இந்த டிஷோட flavor அப்படியே நம்மளை இழுக்குதுன்னேல்லாம் சொல்றாங்க.. அதுகூட பரவாயில்லை.. தேங்காய் அரைக்கும் போது நல்லா coarseஆ அரைச்சுக்கோங்கன்னு சொல்றாங்க.. ஏன்.. கொஞ்சம் கரகரன்னு அரைச்சுக்கோங்கன்னு சொல்றது… "
"நல்லா niceஆ grind பண்ணிக்கங்கன்னு சொல்றாங்க.. நல்லா நெகு நெகுன்னு அரைச்சுக்கோங்கன்னு சொல்றது… "
"மெல்லத் தமிழ் இனி சாகும்ன்னு பாரதி சொன்னப்போ இவங்களை பத்தி தெரியாம சொல்லிட்டாரு போல… இவங்க மிக்ஸில போட்டு தமிழை அடிச்சே கொன்னுடுவாங்க… அப்படியும் சாகலைன்னா சட்டியில போட்டு வறுத்துடுவாங்க போலிருக்கு…. "
சித்ரகுப்தர்: "அமைதி.. அமைதி.. மன்னா..
சமையல் தான் என்றில்லை.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தான் தமிழை மோசமாக கையாளுகிறார்கள்.. அப்படியிருக்க அவர்கள் மேல் மட்டும் ஏன் இந்த கோபம்….?"
யமதர்மர்: "மங்குனி அமைச்சரே… மக்கள் எவ்வளவு தான் நாகரீகம் அடைந்தாலும், அவர்கள் எவ்வளவு தான் உயரங்களை எட்டினாலும், அவர்களை அவர்கள் வேர்களோடு பிணைத்து வைப்பதில் சாப்பாட்டுக்கு முக்கிய பங்கு உண்டல்லவா… அத்தகைய சாப்பாட்டு நிகழ்ச்சிகளிலேயே இப்படி தமிழை மறக்கிறார்களே என்று தான் என் ஆதங்கம்…"
சித்ரகுப்தர்: "உண்மை தான் மன்னா.. இன்று முதல் தமிழ்க்கொலை என்ற வகையினையும் சேர்த்துவிடுகிறேன்… தமிழ்க்கொலையாளிகளுக்கு தண்டனையும் எழுதிவைத்துவிடுகிறேன்…"
யமதர்மர்: "தமிழ்க்கொலையாளிகள் மக்கள் தொலைக்காட்சியை பார்த்திருந்தாலோ அல்லது அதில் நிகழ்ச்சிகள் வழங்கியிருந்தாலோ தண்டனையை குறைத்து எழுதிவிடு குப்தா…"
சித்ரகுப்தர்: "அப்படியே ஆகட்டும் அரசே… உங்கள் கோபம் தணிக்க அருகம்புல் சாறு வரவழைக்கிறேன். அருந்தி..சாந்தமடையுங்கள்!!!"
(Image obtained from google search)
17 கருத்துகள்:
ஆங்கிலப் பெயரை வைத்துக் கொண்டு எழுத பயமாக இருந்தாலும் மிக்ஸி போன்ற சொற்கள் அலவ்(!) செய்யப் பட்டதால் தைரியமாக எழுதுகிறேன் (!!)
நல்ல பதிவு!
சமையல் நிகழ்ச்சிகளில் இந்தத் தொகுப்பாளர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே..! நானும் மக்கள் தொலைக்காட்சியின் விசிறி தான்!
சிரிக்கவும் சிந்திக்கவும், அருமையான பதிவு.
வாங்க மாதவி..
மிக்ஸிக்கு வேற வார்த்தை தேடி, தேடி ஓஞ்சுபோயிட்டேன்.. ரொம்ப தமிழ்படுத்தவேண்டாம்ன்னாலும் வெகு சாதாரணமாய் நாம் உபயோகிக்கும் வார்த்தைகளை கூட மறந்துவிட கூடாது இல்லையா..?
வாங்க மருது..
நன்றிங்க..
சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், நகைச்சுவையுடன் ரசிக்கும்படியும் தந்திருக்கிறீர்கள், ஸ்வர்ணரேக்கா!
வாங்க கவிநயா..
நன்றி.. நன்றி...
"தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை கண்டுகொள்வதாக" வாழ்த்துக்கள் எழுத்தாளரே உங்கள் நல்ல கற்பனைக்கு.
வாங்க மார்டீன்...
நன்றி.. நன்றி.. நன்றிகள் பல..
நகைச்சுவையுடன் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்..
//இந்த யஜமானர்களே இப்படித்தான்… //
அத சொல்லுங்க... இந்த மேனஜர்கள் சரியான டேமேஜர்கள்...:)))
நானும் டேமேஜர் போஸ்ட் ஒன்னு டிராப்ட்ல வெச்சு இருக்கேன்... நீங்க கலக்கிடீங்க... என் போஸ்ட் போடணுமாநு யோசிச்சுட்டு இருக்கேன்... ஹ ஹா... :)))
வாங்க ராஜேஸ்வரி..
நன்றிங்க... பின்னூட்டத்திற்கும்... தொடர்வதற்கும்..
வாங்க புவனா...
//நீங்க கலக்கிடீங்க... //
ஜயோ... நெசமாவா... டாங்கியூ சோ மச்சு...
//என் போஸ்ட் போடணுமாநு யோசிச்சுட்டு இருக்கேன்//
-- வேணாம்.. அழுதுருவேன்..
சிரிக்கவும் சிந்திக்கவும், அருமையான பதிவு.
Super post!!
நல்ல பகிர்வு. அவங்க தமிழ் மட்டும் கொலை செய்வதில்லை. சமையலையே கொலை செய்ய்றாங்களே... நமக்குத் தெரிந்து உருளைக் கிழங்கை வைத்து பொரியல் செய்வாங்க, இல்ல கூட்டு செய்வாங்க, அன்னிக்கு ஒரு அம்மா உருளைக்கிழங்கு சட்னி செய்தாங்க! ம்.... என்ன பண்ணலாம் அவங்களைன்னு யோசிச்சேன்...
மக்கள் எவ்வளவு தான் நாகரீகம் அடைந்தாலும், அவர்கள் எவ்வளவு தான் உயரங்களை எட்டினாலும், அவர்களை அவர்கள் வேர்களோடு பிணைத்து வைப்பதில் சாப்பாட்டுக்கு முக்கிய பங்கு உண்டல்லவா… அத்தகைய சாப்பாட்டு நிகழ்ச்சிகளிலேயே இப்படி தமிழை மறக்கிறார்களே என்று தான் என் ஆதங்கம்..
இப்ப நம்ம சாப்பாட்டுலயே அயல்நாட்டு உணவும் கலந்து போச்சு..
முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட விதம் அருமை.
அசந்து போனேன் என்னமா ய்சிச்சு எழுதி சிரிக்க வச்சுட்டீங்க சூப் சூப் ..சூப்..ப்..ப..ர்..ர்..ரு
Nalla post :) Thanks for sharing:)
Post a Comment