சீனு என்றொரு நாய்க்குட்டி....
February 17, 2009
டேய் சீனு.. எங்கடா இருக்க.. வா வந்து பாலக்குடி... இப்படி என் அம்மா அழைப்பது சத்தியமா என்னை இல்லை.... எங்க நாய்க்குட்டிய... Labrador, Alsation, ராஜபாளையம் போல breedகளை சேர்ந்ததல்ல எங்கள் நாய்க்குட்டி... நாட்டு நாய் என்று சொல்லப்படும் சாதாரண வகையைச் சேர்ந்தது....
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்... கூப்பிடாமலும் வந்து நம்மை நக்கிவிட்டு , செல்லம் கொஞ்சிவிட்டு போவான்.... இரு கால்களிலும் துணியை பிடித்துக் கொண்டு, வாயினால் கிழிப்பது... 'சர்...' என்ற சப்தத்தோடு துணி கிழிவதை கேட்டு மீண்டும் கிழிப்பது.... நம்மிடம் துணியை தந்து விளையாட அழைப்பது...சுற்றி சுற்றி துரத்தினால்... tableக்கு கீழும், sofaக்கு அடியிலும் ஒளிந்து கொள்வது.... நாம் அந்தண்டை நகர்ந்தால் நம்மை நோக்கி ஓடிவருவது... சப்பனங்கால் போட்டு உட்கார்ந்தவுடன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு நம்மை சாப்பிடவிடாமல் செய்வது....படுக்கை விரித்தால் நமக்கு முன் ஏறி படுத்துக்கொள்வது... பால் வாங்கவோ, அல்லது கீரை வாங்கவோ படி இறங்கினால், உடனே தானும் வருவது... வெளியில் இருந்து கொண்டு வரும் பைகளை மோப்பம் பிடித்து, அதைபிடித்து தொங்கிக் கொண்டே வருவது... என்று சீனுவின் சேட்டைகள் நீள்கின்றன....
Retired ஆனபின், தனிமையில் தவித்துக்கொண்டிருந்த என் அப்பாவிற்க்கு இப்போதெல்லாம். நன்றாக பொழுது போகிறது. எல்லாம் சீனுவின் கைங்கர்யம்....
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள்... ஆனால் சில விஷயங்களில் குழந்தையும் நாய்க்குட்டியும் ஒன்று என்றே எனக்கு தோன்றுகிறது...தெய்வத்தையும் நாய்க்குட்டியையும் ஒப்பிடவில்லை நான்..
ஆனால் ஒரு குழந்தையின் இருப்பு எப்படி வீட்டில்ஒரு சூமூகமான நிலையைத் தருகிறதோ... அதேபோல் நாய்க்குட்டியும் வீட்டிற்க்குள் சமாதானத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வருகிறது...
பிள்ளைகளை வெளிநாட்டிலோ, வெளிமாநிலங்களிலோ வேலைக்கு அனுப்பிவிட்டு , தனிமையில் இருக்கும் பெற்றோர்க்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாகத் தாருங்கள்... முதலில் கடுமையாக ஆட்சேபிப்பார்கள்... ஒரு மாதம் கழித்து கேட்டுப்பாருங்கள்... தனிமை என்றால் என்னவென்று கேட்ப்பார்கள்....