கால் நடை GHல் ஒரு நாள்
January 31, 2010
போன வாரம் எங்கள் ஊர் கால் நடை GHக்கு போக நேர்ந்தது. (உபயம்: எங்கள் வீட்டு நாய்க்குட்டி).
ஆடு மாடுகளுக்கெல்லாம் நம்மைப் போல் உயிரும் உணர்வும் உண்டு என்றெல்லாம் படித்திருந்தாலும், அதன் அர்த்தம் எனக்கு அங்கே தான் விளங்கியது.
‘எங்க கண்ணுக்குட்டிக்கு உடம்பு சரியில்ல, மாத்திரை தாங்க’
‘மாடு ரெண்டு நாளா தண்ணியே குடிக்கல’
‘ஆடு இரையெடுக்கல, கொஞ்சம் பாருங்க டாக்டரே’
‘காளை, காலை சாச்சு சாச்சு நடக்குதுங்க. என்னாச்சுன்னு பாருங்க. இதவெச்சு தான் நான் பொழப்பயே ஓட்டறேன்’
‘கோழிக்கு கால்ல அடி பட்டுருச்சு. கட்டு கட்டிவிடுங்க’
- என்றெல்லாம் தங்கள் கால் நடைச் செல்வங்களை கொண்டுவரும் மக்கள்.
அதிலும் ஒரு சிறுவன், மிஞ்சிப்போனால் 8 வயதிருக்கும், ஆட்டுக்குட்டியை தூக்கிவந்திருந்தான். அவனை பார்த்தவுடன் பார்த்திபன் பாணியில்
ஒரு
ஆட்டுக்குட்டியே
ஆட்டுக்குட்டியை
தூக்கிவருகிறதே (அடடே) ஆச்சர்யக்குறி!!!
என்று கவிதை தோன்றியது.
அந்த ஆட்டுக்குட்டியை படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றுகையில், சோகமாய் நின்றிருந்தான். ‘குட்டிய பனியில விடாதே’ என்று சொல்லி, மாத்திரை தந்து அனுப்பினார்கள்.
இதுபோல் நாய்க்குட்டியை, கோழியை கட்டை பைகளில் தூக்கிவந்த தூக்கிவந்த சிறுவர்களும் உண்டு.
இதேல்லாம் GHல் தான் சாத்தியம். இந்த கால் நடைச் செல்வங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு பெட் & வெட் கிளினிக்குகளில் ஒவ்வொருமுறையும் 200, 300 ரூ தந்து வைத்தியம் பார்க்கமுடியுமா..?
இந்த GH, திருச்சியிலுள்ள எல்லா (62) வார்டுகளுக்கும் சேர்த்து என்று சொன்னார்கள். ஒரு 4-5 வார்டுகளுக்கு சேர்த்து இந்த மாதிரி மாட்டு ஆஸ்பத்திரிகளை கட்டிவிட்டால் தான் என்ன? ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?