ஆத்திகமும், நாத்திகமும்
January 31, 2011
பதிவர் ஆதியின் ‘நாத்திகம் காத்தல்’ பதிவை படித்தபின் என்னுள் எழுந்த எண்ணங்களின் தொகுப்பே இப்பதிவு....
ஆத்திகம்..
கடவுள் நம்பிக்கை என்பது என்ன..?
ஒரு வரியில் சொல்வதானால்... நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு என்று நம்புவதே அது.
ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொண்டிருப்பதோடு நில்லாமல் அந்த கடவுள் நம்பிக்கையை கொண்ட ஒரு கூட்டம் (மதம்) அந்த சக்திக்கு ஒரு வடிவம் தந்தது.. (ஒரு வடிவம் அல்ல.. பல வடிவங்கள்.) ஆணாகவோ, பெண்ணாகவோ சித்தரித்தது, அதற்கு ஆடைகளையும், ஆபரணங்களையும் (அதுவும் அவரவர் வழக்கப்படி, இஷ்ட்டப்படி...) தந்து மகிழ்ந்தது..
அந்த காலத்தில் ஏற்பட்ட வடிவங்களில் அந்த காலத்திய உடைகளான வேட்டி, சட்டை, புடவைகளை பார்க்கலாம்.. ஒரு வேளை இந்த காலத்தில் ஒரு புதிய கூட்டம் (மதம்) உருவானால், அந்த கூட்டம் புதியதோர் வடிவத்தை தந்தால் அதில் ஜின்ஸ் பேண்ட், பாப் கட் கொண்ட உருவங்கள் ஏற்படலாம். அந்த உருவங்களை நம்பிக்கைகளின் பேரில் நாம் வழிபடவும் செய்யலாம். தவறில்லையே!!!
ஆடைகள், ஆபரணங்களோடு நில்லாமல் நியம நிஷ்ட்டைகளும் ஏற்படுத்தப்பட்டன… அதாவது do’s and don’t’s. அதோடு நிற்கவில்லை.. அந்த உருவங்கள் குடியிருக்க இடங்கள் (கோவில்கள், சர்ச்சுகள், பிற வழிபாட்டுத் தலங்கள்) கட்டப்பட்டன.. அதை பாதுகாக்க அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்… அந்த இடங்களுக்கென சொத்துக்கள் உருவாக்கப்பட்டன… அந்த சொத்துக்களின் வருமானத்தில் அந்த வடிவங்களுக்கான பண்டிகைகள் முதலான காரியங்கள் நடந்தேறின..
எல்லாமே சரியாக நடக்குமா என்ன? சில அறங்காவலர்கள் அந்த சொத்துக்களை அபகரிக்கவும் செய்தார்கள்… இப்படிப்பட்ட சூழலில் நாம் அந்த அறங்காவலர்களை தான் தண்டிக்கவும், பழிக்கவும் செய்யவேண்டுமே தவிர, தெய்வ நம்பிக்கையின் காரணமாகத்தானே இப்படி நடந்தது, எனவே கடவுள் நம்பிக்கையே தவறு என்று சொல்லலாகுமா…!!!!
சபரிமலை புலிமேடு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். பக்தி என்று சொல்லிக்கொண்டு எதற்காக இத்தனை மக்கள் அங்கே வருகிறார்கள். எல்லோரும் டிவியில் மகரவிளக்கை காணவேண்டியது தானே என்று சிலர் “The Hindu” எடிட்டர் பகுதியில் எழுதியிருந்தார்கள். நாத்திகர்களும் இந்த சம்பவத்தை வைத்து கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்கிறார்கள். இதே கோவிலாக இல்லாமல் ஒரு தொழிற்சாலையாக, பாலமாக, இருந்தால்…
கூட்டம் கூடுவது மக்கள் தவறல்ல, அதற்கான சரியான வசதிகளை செய்து தராதது நிர்வாகத்தின் தவறேயாகும்.
மதமோ, கடவுள் நம்பிக்கையோ, அறமோ... ஏதோ ஒரு பெயரில் அக்காலத்தில் மக்களுக்கு தொண்டு செய்யவே நினைத்தார்கள்… காலப்போக்கில் அவை மாறிப்போய்விட்டது.. அவ்வளவே..!!!
என்னைப் பொருத்தவரையில் நீ இந்த காரியத்தை முடிந்துக்கொடு, நான் இதை செய்கிறேன் என்று சாமியிடம் பேரம் பேசுவது தவறு மாறாக தெய்வமே.. எனக்கு இப்படிப்பட்ட கஷ்ட்டம் வந்திருக்கின்றது அதை தாங்கும் சக்தியை தா.. அல்லது அதை தீர்க்கும் வழியை காட்டு என்று வேண்டிக்கொள்ளலாம்.. ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் நம்மால், ஒரு சராசரி மனிதனால் அப்படிப்பட்ட தெளிந்த நிலையில் இருக்கமுடிவதில்லையே… எனவே தான் கைக்கு கிடைத்த ஆதாரமாக மூடநம்பிக்கைளை பற்றிக்கொள்கிறோம் சில சமயங்களில்.
உண்மையில் மூடநம்பிக்கைகள் என்று கிடையாது மாறாக அவையனைத்துமே திரிக்கப்பட்ட நம்பிக்கைகள் தான். உதாரணத்திற்கு மொட்டையடிப்பதை எடுத்துக்கொள்ளலாம்.
நான் இப்படி தப்பு செய்துவிட்டேன். அதன் காரணமான என் அகங்காரத்தை நானே ஒழித்துக்கொள்ளும் விதமாக மொட்டையடித்துக்கொள்கிறேன் என்று வேண்டிக்கொண்டார்கள் அன்று.
ஆனால் இன்றா, நான் மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன், அந்த தெய்வம் கண்டிப்பாக எனக்கு அதை செய்துதரும் என்று சொல்கிறார்கள். இந்த திரிக்கப்பட்ட நம்பிக்கை தான் தவறே, தவிர கடவுள் நம்பிக்கை தவறல்லவே..
ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு செல்கிறீர்கள். அதில் பேசப்போகும் பாயிண்டுகளை நன்கு குறிப்பெடுத்துள்ளீர்கள்.. Projector போன்ற உபகரணங்களையும் test செய்து வைத்துக்கொள்கிறீர்கள், உங்கள் மீது உங்களுக்கு அசாத்திய நம்பிக்கையும் உள்ளது. ஆனாலும் புறப்படும் சமயம் கடவுளை வணங்கிவிட்டு செல்கிறீர்கள். இது மூடநம்பிக்கையா? புறப்படும் இடத்திலிருந்து நாம் சென்று சேரும் இடம் வரும்வரை நம் கண்ணுக்குதெரியாத எத்தனையோ இதர்பாடுகளை களைந்து நம்மை காக்குமாறு நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியிடம், கேட்டுக்கொள்கிறோம். அவ்வளவே..!!!
ஆனால் கடவுளே இல்லை என்று சொல்வதை கேட்டால் சிரிப்புத்தான் வருகின்றது.. ஒரு அலுவலத்திற்கு நீங்கள் ஒரு கடைநிலை ஊழியராக சேரப்போகின்றீர்கள்.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தின் உரிமையாளரை நீங்கள் பார்க்கவில்லை.. உடனே அந்த அலுவலத்திற்கு உரிமையாளரே கிடையாது என்று சொல்லிவிடமுடியுமா…
தக்கிளியூண்டு அலுவலத்திற்கே உரிமையாளர் இருப்பாரென்றால், இவ்வளவு பெரிய அண்ட சராசரத்திற்கு உரிமையாளர் / பாதுகாவலர் இருக்காமல் இருப்பாரா..? அப்படிப்பட்ட அவர் நம்மைப்போன்ற கடைநிலை ஊழியருக்கு காட்சி தான் தருவாரா..?
ஆனால் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகளே நாத்திகர்களை உருவாக்குகின்றது என்று எண்ணுகிறேன். எனவை நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையை எதிர்க்கவேண்டாமென்றும் அதன் பெயரைச் சொல்லிக்கொண்டு நடத்தப்படும் மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் எதிர்க்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திகர்கள் கடவுள் நம்பிக்கையையும், மூடநம்பிக்கைகளையும், தவறுகளையும் பிரித்தரிய கற்றுக்கொண்டு மேன்மேலும் கடவுள் நம்பிக்கையில் மூழ்கித் திளைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.