உள்ளூரில் வேலை பார்ப்பது கொலைக் குற்றமா???
July 23, 2009
நான் வாக்கிங் போகும்போது, தம்பதி சகிதமாக இருவர் வாக்கிங் வருவார்கள்... தினமும் பார்கிறோமே என்று குட் மார்னிங் சொல்ல ஆரம்பித்தேன்... வந்தது வில்லங்கம்... ரெண்டு நாள் கழித்து, எனக்கும் அவருக்குமான உரையாடல்...
அவர்: ஏம்மா, படிக்கிறியா..?
நான்: இல்ல சார்.. வேலை பாக்கறேன்..
அவர்: என்ன படிச்சிருக்க?
நான்: பி.இ...
அவர்: பி.இ ல?
நான்: ECE சார்..
அவர்: இங்க என்ன வேலை பாக்கற..?
நான்: Patent related வேலை...
அவர்: ஏன் இங்கயே இருக்க, சென்னை, Bangaloreன்னு போகலயா..?
நான்: இங்கயே வேலை இருக்கப்ப நான் ஏன் சார் போகணும்...?
அவர்: என் பையன், MCA படிச்சிட்டே சென்னைல, MNCல வேலை பாக்கறானேம்மா... நீ பி.இ.ECE படிச்சிட்டு ஏன் இங்கயே இருக்க..?
நான்: ?????
அவர்: இன்ட்ர்னெட்ல அப்ளை பண்ணிட்டே இரும்மா... கண்டிப்பா கிடைக்கும்...
நான்: ?????
உள்ளூரில் வேலை பார்த்தால், அது வேலை பார்க்கும் கணக்கில் சேர்த்தி இல்லை போலிருக்கிறது... உள்ளூரில் ஒருகம்பெனி இருந்து, அதில் எனக்கு வேலையும் இருக்கையில் சென்னை, Bangalore என்று எதற்காக போக வேண்டும் என்ற என் நியாயம் எடுபடவே இல்லை...!!!!
இதே நான் அவரிடம் 'சார், உங்க பையன் கிட்ட சொல்லி சென்னைல ஒரு reference வாங்கி தாங்க என்று சொல்லியிருந்தால்...' எங்கம்மா... அவனுக்கே ஒரு வருஷமா இன்கிரிமென்ட் இல்லை, recession வேற, ப்ராஜெக்ட் இல்லை என்றும், இன்ன பிற இத்தியாதிகளை கூறியும், தெரித்து ஓடியிருப்பார்....
ஆனால், என் ஆதங்கம் எல்லாம், என்னவோ என்னை கேள்வி கேக்கணும்னே, காலையில் எழுந்து வந்தது மாதிரி, இத்தனை கேள்வி கேட்ட அவர் கடைசிவரை என் பெயரை கேட்கவேயில்லை என்பதே....