சமையலறை என்னும் ஓர் மாய அறை....
July 21, 2010
வெகு சில நாட்களுக்கு முன் வரை சமையலறை என்பது ஓர் மாய அறையாக இருந்தது, என்னை பொறுத்தவரையில்... ஆம்..
"அம்மா... பசிக்குது.. என்ன இருக்கு சாப்பிட..?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்று, இருப்பதை தட்டில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டு வரும்வரை மட்டுமே என் கண்களுக்கு அந்த அறை தெரியும்...மற்ற சமயங்களில் எல்லாம் அப்படி ஒரு அறை இருப்பதே என் கண்களுக்கு தெரியாது..
அம்மா சமைத்துவிடுவதாலும், அம்மா ஊருக்கு போயிருந்தால் அக்கா, அம்மாவைக்காட்டிலும் அருமையாய் சமைத்து தந்துவிட்டதாலும், இருவரும் வெளியே போயிருக்கும் பட்சத்தில் அப்பாவே சமைத்து விடுவதாலும், அந்த மாய அறையை பற்றியோ, அதில் நிகழ்த்தப்படும் மாயாஜாலங்களைப் பற்றியோ நான் அறிந்ததில்லை...
ஆனால் இப்பொழுதோ...
நான் தங்கமணியாக ஆகிவிட்டதினாலும், நான் செய்வதையும் சாப்பிடுவதற்கென்று ரங்கமணி வந்துவிட்ட காரணத்தினாலும்... எப்போதாவது என் கண்களில் பட்டு வந்த அந்த மாய அறையிலேயே எந்நேரமும் நான் இருக்கவேண்டியதாக இருக்கின்றது...
ஆனாலும்... இப்பொழுதும் சமையலறை, மாய அறையாகவே உள்ளது...
அது என்ன, அம்மாவும், பெரியம்மாவும் செஞ்சா மட்டும் உப்புமா நன்றாக வருகிறது, எனக்கு மட்டும் கட்டி கட்டியாக வருகிறது...
எனக்கு மட்டும் பொரியல் தீய்ந்து போய்விடுகிறது...
சர்க்கரை பாகு கட்டி பிடித்து, பாத்திரத்தோடு பாத்திரமாய் ஒன்றிவிடுகிறது....
என்ன கொடுமை சரவணா, இது....?